சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளியாக கூறப்படும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என மெலனியா ட்ரம்ப் தெளிவாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியாவுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்றும், அவை தன்னைக் குறிவைத்து பரப்பப்படும் அவதூறு செய்திகள் என்றும் மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தன்னை தொடர்புபடுத்தும் தகவல்கள் அடிப்படையற்றவை என்றும், அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புபவர்கள் அறநெறி மற்றும் பொறுப்புணர்வு இன்றி செயல்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயலும் கீழ்த்தரமான செயல்கள் எனவும் மெலனியா குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையில் வெளியிட்ட அறிக்கையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லையெனவும், இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தானும் தனது வழக்கறிஞர்களும் சட்ட ரீதியாக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு பெண்ணும் தங்களது உண்மையை வெளிப்படுத்தும் உரிமை பெற்றவர்கள் என்றும், உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாள் நிச்சயம் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
