உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் – மே தினச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி

 உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நியாயமானதும் பாதுகாப்பானதும் ஆன பணிச் சூழலை உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட மே தின வாழ்த்துச் செய்தியில், இலங்கையின் தொழிலாளர் வரலாறு பல தசாப்தங்களாக உரிமைகளுக்காக போராடிய உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை பிரதிபலிப்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து தொடங்கிய தொழிலாளர் இயக்கம், ஏ.ஈ. குணசிங்க போன்ற முன்னோடிகளின் வழிகாட்டுதலால் வலுப்பெற்று, அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது என அவர் குறிப்பிட்டார்.





1923ஆம் ஆண்டின் ரயில்வே வேலைநிறுத்தமும், 1947ஆம் ஆண்டின் அரச சேவை வேலைநிறுத்தமும் போன்ற வரலாற்றுச் சம்பவங்கள், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் சமூக நீதியிலும் தொழிலாளர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தோட்டத் துறை முதல் துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட பல துறைகளில் உழைக்கும் மக்களின் பங்களிப்பினால் தான் இன்றைய தொழில்சார் உரிமைகள் உருவாகியுள்ளன என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அதேவேளை, 1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் 8 மணிநேர வேலை நேரக் கோரிக்கையுடன் போராடி உயிரிழந்த தொழிலாளர்களை நினைவுகூர்ந்து, உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு மரியாதை செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டின் மே தினம் மக்கள் சக்தியால் உருவான அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படுவதால், அது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உரிய மரியாதையை வழங்குவதும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாக இருப்பதாகவும், சேவைகளை விரிவுபடுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்கள் விரைவில் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். விசேட தேவையுடையோர் உட்பட அனைத்து பிரஜைகளுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, கண்ணியமான தொழில்சார் வாழ்க்கையை உருவாக்கும் சூழல் உருவாக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனுடன், ஊதியமற்ற உழைப்பை அங்கீகரித்து, அத்தகைய தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய கட்டமைப்பை உருவாக்குவது முக்கிய முன்னுரிமையாகக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து உழைப்பையும் மதிக்கும், உரிமைகள் பாதுகாக்கப்படும், சமத்துவம் நிலவும் ஒரு நாட்டை உருவாக்குவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை இந்த மே தினம் மீண்டும் நினைவூட்டுகிறது என பிரதமர் தனது செய்தியில் தெரிவித்தார்.