அமெரிக்காவில் இருந்து கடத்தப்பட்டு பல ஆண்டுகள் வெளிநாடுகளில் பரவி இருந்த 337 பெறுமதிமிக்க தொல்பொருட்கள், அவற்றின் மூலநிலையான இத்தாலிக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கலாசார சொத்து மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, ரோம் மற்றும் வொஷிங்டன் டி.சி. இடையிலான வலுவான இராஜதந்திர மற்றும் சட்ட அமலாக்க ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தொல்பொருட்கள் தொகுப்பில் பண்டைய ரோமானிய சிற்பங்கள் முதல் கிரேக்க, எட்ரஸ்கன் மற்றும் எகிப்திய நாகரிகங்களைச் சேர்ந்த கலைப்பொருட்கள் வரை பல்வேறு அரிய வரலாற்றுச் சின்னங்கள் அடங்கியுள்ளன. கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த நாணயங்கள், ஆபரணங்கள், மட்பாண்டங்கள் மற்றும் கட்டடக்கலை சிதைவுகள் போன்றவை இந்த மீட்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் தற்போது காராபினியேரி கலாசார பாதுகாப்புப் பிரிவு தலைமையகத்தில் பாதுகாப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பெரும் மீட்பு நடவடிக்கை ஒருநாள் முயற்சியின் விளைவல்ல; மாறாக, நியூயோர்க் நகரை மையமாகக் கொண்டு பல ஆண்டுகள் நீடித்த விசாரணைகளின் முடிவாக இது சாத்தியமானது. குறிப்பாக, மென்ஹாட்டன் மாவட்ட சட்டமா அதிபர் அலுவலகம் இந்த நடவடிக்கையில் முக்கிய பங்காற்றி, தனியாகவே 221 பொருட்களை கண்டறிந்து மீட்டுள்ளது. இந்தப் பொருட்களில் 1960ஆம் ஆண்டு ரோம் அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாவீரன் அலெக்சாண்டரின் பளிங்குத் தலைச் சிற்பம் மற்றும் ஹெர்குலேனியம் நகரிலிருந்து திருடப்பட்ட வெண்கலச் சிற்பம் போன்ற உலகளாவிய வரலாற்று மதிப்புமிக்க கலைப்பொருட்களும் அடங்குகின்றன.

இந்த ஒப்படைப்பு நிகழ்வை முன்னிட்டு கருத்து வெளியிட்ட இத்தாலிக்கான அமெரிக்க தூதுவர் டில்மேன் ஜே. ஃபர்டிட்டா, இத்தாலியின் செழுமையான வரலாறு மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பதில் அமெரிக்கா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இத்தாலிய கலாசார அமைச்சர் அலெஸாண்ட்ரோ ஜூலி, கலாசார மரபுகளைப் பாதுகாப்பது என்பது ஒரு நாட்டின் அடையாளத்தையும் அதன் வரலாற்று பெருமையையும் காப்பாற்றுவதற்கான முக்கிய பொறுப்பு என்றும், இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு மதிப்புமிக்க பாரம்பரியத்தை வழங்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலி மற்றும் அமெரிக்கா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தொல்பொருள் கடத்தலைத் தடுக்கவும், தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த ஒத்துழைப்பின் பலனாகவே இவ்வளவு பெரிய அளவில் தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின், இந்த அரிய பொருட்கள் அவை இருந்த அசல் இடங்களுக்கே மீண்டும் கொண்டு செல்லப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு, சர்வதேச அளவில் கலாசார சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.