இந்திய திரைப்பட இசை உலகின் முக்கிய குரல்களில் ஒருவராக திகழ்ந்த Asha Bhosle, 92 வயதில் மும்பையில் காலமானார் என்ற செய்தி ரசிகர்கள் மற்றும் இசை உலகினரை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையில் வசித்து வந்த அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, Breach Candy Hospital வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாச தொடர்பான சிக்கல்கள் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவரது மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இறுதிச்சடங்குகள் மும்பையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஆஷா போஸ்லே, ஏழு தசாப்தங்களுக்கு மேலாக இசை உலகில் சாதனை படைத்தவர் எனப் பாராட்டப்படுகிறார். இந்திய திரைப்பட இசைக்கு அவர் அளித்த பங்களிப்பு மிகப்பெரியது என அரசியல் தலைவர்கள் மற்றும் இசை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்கள் பாடிய இவர், ‘செண்பகமே’, ‘செப்டம்பர் மாதம்’, ‘கொஞ்சநேரம்’ போன்ற பல பிரபல தமிழ் பாடல்களையும் பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார். மேலும், இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புகழ்பெற்ற பாடகி Lata Mangeshkar அவர்களின் தங்கை ஆன ஆஷா போஸ்லே, தனது தனித்துவமான குரலாலும் பல்துறை திறமையாலும் இந்திய இசை வரலாற்றில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றவர் எனக் குறிப்பிடப்படுகிறார்.
