அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு அந்த வீட்டிலிருந்து 30 விநாடி இடைவெளியில் இரண்டு துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இது ஒரு கொலை மற்றும் உயிர் மாய்ப்பு சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த சமிந்திகா இலங்கை பூர்வீகம் கொண்டவராகும். சமிந்திகா சமீபத்தில் தனது கணவரை விட்டுப் பிரிந்து சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆரோன் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆரோன் ஏற்கனவே பலமுறை வன்முறை மற்றும் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டவர் என முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட அயலவர்கள் அது நரியைச் சுடப் பயன்படுத்தப்பட்ட சத்தமாக இருக்கலாம் என தவறாக கருதியுள்ளனர்.
இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை எனவும் தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஆரோனின் குடும்பத்தினர் இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதோடு, தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுள்ளனர்.
ஒரு வருடத்திற்கு மேலாக அந்த வீட்டில் வசித்து வந்த இவர்களை ஒரு அன்பான தம்பதி என அயலவர்கள் நினைத்திருந்தனர். எனினும் சமிந்திகா சிறிது காலம் பிரிந்து வாழ்ந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் கூடுதல் தகவல் தெரிந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் நடந்த வீடு Haunted Hills எனப்படும் மர்மமான கதைகள் நிறைந்த பகுதிக்கு அருகே அமைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
