இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (12) திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
கடற்படையின் நீண்டதூர ரோந்து கப்பல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகிலிருந்து சுமார் 600 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
அதேபோல், போதைப்பொருட்களுடன் அதே படகிலிருந்து 08 கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் , 02 T56 ரக துப்பாக்கிகள், 01 M16 ரக துப்பாக்கி. ( M16 ரக துப்பாக்கியானது பாதுகாப்புப் படையின் விசேட பிரிவினரால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு நவீன ஆயுதமாகும்) ஆகிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மற்றைய பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் கடத்தப்பட்ட படகிற்கு உதவியாகவும் உளவு பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
