அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓமன் வெளியுறவு துறை அமைச்சர் பத்ர அல் புசைதி உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி அவர் எக்ஸ் கணக்கில் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தையானது எதிர்வரும் வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெற உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கான நடவடிக்கையை நோக்கி அது நகரும் என அவர் தெரிவித்து உள்ளார்.
ஈரான் மீது கடந்த ஆண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் இருந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.
எப்போது வேண்டுமென்றாலும் நேரடி போர் ஏற்பட கூடிய சாத்தியம் உள்ள சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா தன்னுடைய படைகளை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இடம் மாற்றி வருகிறது.
எந்த திட்டம் என முன்னறிவிக்கப்படாமல், ஆனால் படையினரை பல்வேறு பகுதிகளில் நிலை நிறுத்தி வருகிறது.
இதன்படி, கட்டார் அல் உதீத் படை தளத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்களை இடம் மாற்றி கொண்டு சென்றுள்ளது. இதனை அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதேபோன்று, அமெரிக்காவின் இராணுவ தளங்கள் அமைந்துள்ள பஹ்ரைன், ஈராக், சிரியா, குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் நாடுகளிலும் கூட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுதங்களின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.
அவர்கள் எல்லோரும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். ஒருவேளை போர் ஏற்பட்டால் இந்த 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காக கூடும் என கூறப்படுகிறது.
ஏனெனில், 2025-ம் ஆண்டு ஜூனில் கட்டாரில் அமைந்த அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனால், பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அந்த தாக்குதலை ஈரான் நடத்தவில்லை. ஈரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்காவின் தாக்குதலுக்கு எச்சரிக்கை விடும் வகையிலேயே இந்த பதிலடி அமைந்தது.
ஆனால், அதன்பின்னர் ஐ.நா.வில் ஈரான் சார்பில் விடப்பட்ட எச்சரிக்கையில், அடுத்த முறை அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பின்னர் அனைத்து அமெரிக்க தளங்கள், அமைப்புகள், கட்டிடங்கள் மீதும் கடுமையான பதிலடி தாக்குதல் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அமெரிக்கா மாற்றி உள்ளது என கூறப்படுகிறது. அதனுடன் தாக்குதலில் இருந்து தப்பும் வகையில், ஈரானில் இருந்து சற்று தொலைவில் அமெரிக்காவின் 2 விமானந்தாங்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
எனினும், தூதரக அளவிலான பேச்சுவார்த்தையில் முடிவு வராவிட்டால், டிரம்ப் அரசு இராணுவ தாக்குதல்களை தொடங்க தயாராகி வருகிறது என்றும் கூறப்பட்டது.
ஏனெனில் ஈரானில் தலைமை மாற்றம் தேவை என டிரம்ப் முன்பு கூறியதும் கவனிக்கத்தக்கது. எனினும், ஈரானும் பதிலடிக்கு தயாராகவே உள்ளது.
அதற்கேற்ப அதன் தலைவர் கமேனி சமீபத்தில் கூட டிரம்ப்புக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடும் வகையில் பேசினார். இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை, ஜெனீவாவில் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.