போதைப்பொருள் ஒழிப்புக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் கடற்படை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் கடற்படை

 


 நாட்டின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் கடல் வலயங்களை உள்ளடக்கி கடந்த ஆண்டில் கடற்படை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கமைய 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 376 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

25 ஆயிரத்து 206 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஆயிரத்து 50 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 47 ஆயிரத்து 725 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 2982 கிலோகிராம் ஐஸ் ஆகிய போதைப்பொருட்களுடன் 11 உள்ளூர் படகுகள் கைப்பற்றப்பட்டதுடன் 169 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

1297 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 5768 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா மற்றும் 9 படகுகளுடன்  73 சந்தேக நபர்களும் இந்த சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

19 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட 257 கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

168 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 இலட்சத்து 83 ஆயிரத்து 722 போதை மாத்திரைகளுடன் 16 சந்தேக நபர்கள் மற்றும் 04 படகுகளுடனும் 100 மில்லியன் ரூபா பெறுமதியான 33 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருளுடன் 7 சந்தேகநபர்களும் 42 மில்லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சத்து 20 ஆயிரத்து 385 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 36 சந்தேகநபர்கள் 03 படகுகளுடனும் கடற்படை மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட 470 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 67 ஆயிரத்து 200 கிலோகிராம் பீடி இலைகளுடன் 64 சந்தேக நபர்களுடன் 64 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்காக செயல்படுத்தப்படும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய நடவடிக்கைக்கு இலங்கை கடற்படை  விசேட பங்களிப்பை வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடல்சார் பங்குதாரர்கள் மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் கரையோரப் பகுதிகள் மற்றும் கடல் வலயத்தை உள்ளடக்கிய வகையில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

About ஈழ தீபம்