வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று(10) 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை ஊடறுத்து நிலைகொண்டுள்ள வடகீழ் பருவப்பெயர்ச்சியின் காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டமாக காணப்படுமெனவும் வௌியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
