நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் தாமதத்திற்கு இதனால் தான் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் தாமதத்திற்கு இதனால் தான்

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு இதுவரை 335 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 115 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, இந்த விசாரணைகளில் தாமதம் காணப்படுவதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...
இதுவரை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு 335 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அந்த முறைப்பாடுகளில் 89 தொடர்பில் விசாரணைகள் நிறைவுபெற்று, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக அனுப்பட்டுள்ளது.இவ்வாறு அனுப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக அது மீண்டும் வழங்கப்படும்.
அந்த விசாரணைகள் நிறைவுபெற்று மீண்டும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பட்ட முறைப்பாடுகளில் 12 தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 115 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன அல்லது மேலதிக விசாரணைகளுக்காக ஏனைய நிறுவனங்களுக்கு அனுப்பட்டுள்ளன.
131 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதுவரை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுடன் தொடர்புபட்ட 56 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் பிரதிவாதிகளும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.
10 சந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.இதன்பிரகாரம் மொத்தமாக 66 பேர் நீதிமன்ற செயன்முறைகளுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர். 25 நாடுகளிடம் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பில் 86 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த கோரிக்கைகளில் 39 ற்கு ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பிரித்தானியாவிடம் 13 உம், சிங்கப்பூரிடம் 13 உம், இந்தியாவிடம் 13 உம், அமெரிக்காவிடம் 8 உம் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணைகள் தாமதமடைந்துள்ளன.இந்த விசாரணைகளின் தன்மையும் இதற்கு ஒரு காரணம்.
அதேபோன்று இந்த விசாரணைகளுக்கான தடயவியல் கணக்கியல் அறிவு தேவைப்படுகின்றது. இதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கு காலம் எடுத்தது.சில விசாரணைகளுக்காக வெளிநாட்டு உதவி தேவைப்படுகின்றது.இந்த காரணங்களுக்காகவே இந்த விசாரணைகள் காலதாமதமாகின்றது எனத் தெரிவித்தார்.

About UK TAMIL NEWS