காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது அம்மா, அப்பா, அக்காவை கொலை..!




வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காக்கங்கரை கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் இருந்து நள்ளிரவில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, அந்த வீட்டின் உரிமையாளர் மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர் மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் சுகன்யா, ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

மோகனின் 20 வயது மகன் தமிழரசன் மார்பில் லேசான காயத்தோடு கதறிக் கொண்டிருந்தான். அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்ற 3 பேரும் உயிரிழந்து விட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோப்ப நாய் வீட்டை 2 முறை சுற்றி அப்படியே படுத்துக் கொண்டது. எந்த தடயமும் இல்லை. ஒரே சாட்சி தமிழரசன் தான்.

நள்ளிரவு 3 மணிக்கு வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்த போது, திடீரென முகமூடி அணிந்த மர்ம நபர்கள், என் அப்பா, அம்மா, அக்காவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டனர். என்னையும் கொல்ல முயன்றனர் என மார்பில் இருக்கும் லேசான காயத்தை காட்டியுள்ளான் தமிழரசன். இது நம்புப்படியாக இல்லை என்பதால், அவனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பி.டெக் படித்துவிட்டு ஓசூரில் வேலை செய்து கொண்டிருந்த தமிழரசன்,  பெங்களுருவில் வேறு வேலைக்கு சென்று விட்டதாக அண்மையில் வீட்டில் கூறியுள்ளான். ஆனால் இது நம்பும்படியாக இல்லை என அவனது நண்பர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் கூறியுள்ளனர்.  இந்நிலையில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது அம்மா, அப்பா, அக்காவை கொலை செய்ததாக அந்த இளைஞன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.