சீ.விக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளோம்! மாவை எம்.பி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொண்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், நேற்றைய தினம் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காது தன்னிச்சையாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என முதலமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழரசு கட்சியை முதலமைச்சர் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றார். எனவேதான் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொண்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.