தஞ்சை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சிவபிரித்தி மருத்துவமனையில் தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி 94-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முகாம் இன்று நடந்தது. இதில் கனிமொழி எம்.பி.கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தை ஆளும் தகுதி நடிகர் ரஜினி காந்துக்கு தான் உள்ளது என்று தொல்.திருமாவளவன் கூறி இருக்கிறாரே? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த கனிமொழி தமிழகத்தை ஆளும் தகுதியும், திறமையும் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் உள்ளது. இது தொடர்பாக நிறைய ஊடகங்கள் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் அவர் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம். மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது
தமிழகத்தின் கல்வி, உயர்கல்வி, தொழில்துறை, மருத்துவத்துறை ஆகியவை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. இது தி.மு.க தலைவர் கருணாநிதி ஆட்சியின் போது சாத்தியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறிய தாவது:-
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு தானாக இயங்க வில்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்குவதாக ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.
தற்போது பா.ஜனதாவின் சில தலைவர்கள் இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசு சுயமாக சிந்தித்து மக்களுக்காக நடை பெறும் ஆட்சியாக தெரியவில்லை. இது பா.ஜனதா கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க் களுக்கு பணம் தந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். கவர்னரை சந்தித்து அதற்காக மனு தரப்படும். தேவைப்பட்டால் ஜனாதிபதியை சந்திப்போம் என தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து பா.ஜனதா கட்சி தற்போது தான் எதிர்க்கட்சி மற்றும் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேச தொடங்கியுள்ளது. எல்லோரும் ஒன்றுகூடி வேட்பாளரை நிறுத்துவதற்கு பிரச்சினை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை கட்டாயம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆதார் அட்டை இன்னும் அனைவருக்கும் முழுமையாக கிடைக்க வில்லை. அரசு உதவித் தொகை பெறவும், வங்கி கணக்கு தொடங்குவது போன்றவற்றுக்கும் கட்டாயம் என கூறியுள்ளனர். ஆதார் அட்டை இல்லாதவர்களின் நிலையை மத்திய அரசு நினைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.