பாகிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 6 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.
இந்த வருடம் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலேயே எதிர்கொண்ட தோல்வி இலங்கைக்கு மட்டுமல்ல இரசிகர்களுக்கும் பலத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.
இந் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்துமா அல்லது தொடரை பறிகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் 100 க்கு 200 வீதும் சகலதுறைகளிலும் இலங்கை திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.
முதலாவது போட்டி முடிவடைந்த பின்னர் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் துடுப்பாட்ட வீரர் ஜனித் லியனகேயும் வெளியிட்ட மாறுபாடான கருத்துக்குள் இரசிகர்களை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்கப் போவதில்லை.
இரண்டு தினங்கள் விரிப்புகளால் மூடப்பட்டிருந்த ஆடுகளத்தில் வெற்றி இலக்கை நிர்ணயிப்பது இலகுவல்ல என தசுன் ஷானக்கவும் ஆடுகளத்தில் குறிப்பிடும் அளவுக்கு சிக்கல் இருக்கவில்லை, ஆனால் நாங்கள்தான் பிரகாசிக்கவில்லை என ஜனித் லியனகேயும் தெரிவித்திருந்தனர்.
இந்தப் போட்டியில் இலங்கை தோல்வியை நெருங்கிக்கொண்டிருந்தபோது தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரியவும் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநர் லசித் மாலிங்கவும் வெதனையுடன் காணப்பட்டனர்.
முதலாவது போட்டி முடிவடைந்த பின்னர், தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய, தெரிவுக் குழுத் தலைவர் ப்ரமோதய விக்ரமசிங்க, தெரிவாளர்களான இந்திக்க டி சேரம், தரங்க பரணவித்தாரண, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை விளையாடப்படவுள்ள ஆடுகளத்தை ஆராய்ந்ததுடன் தங்களிடையே கருத்துப்பரிமாற்றங்களிலும் ஈடுபட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
ஆடுகளங்களின் தன்மை எப்படி இருக்கிறது என்பதல்ல. அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் எத்தகைய் ஆடுகளத்திலும் திறமையை வெளிப்படுத்துவது அவசியம். எனவே, ஆடுகளங்களை ஆய்வு செய்து இப்படித்தான் விளையாடவேண்டும், அப்படித்தான் விளையாடவேண்டும் என்று தீர்மானிப்பது ஒருபுறமிருக்க, வீரர்கள் தங்களது மிகச் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன் தோல்விகளிலிருந்து மீள்வதென்பது பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதாகும். எனவே ஆரம்பத் தோல்வியினால் துவண்டுவிடாமல் அதனை புறந்தள்ளி வைத்துவிட்டு இலங்கை வீரர்கள் அனைவரும் முழுமையான திட மனதுடன் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, ஒரணி என்ற கூட்டு உணர்வு, வைராக்கியம் ஆகிய அனைத்தையும் ஒருங்கே பிரயோகித்து இன்றைய போட்டியில் வெற்றிக் கணக்கை ஆரம்பித்து தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது போட்டியில் கவனக்குறைவான மற்றும் தவறான அடி தெரிவுகளால் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்ததாலும் இலக்கை நோக்கி பந்துவீசத் தவறியதாலுமே இலங்கை தோல்வியைத் தழுவியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுததாட அழைக்கப்பட்ட இலங்கை 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 16.4 ஓவர்களில் 4விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டியது
