நல்லிணக்க நகர்வுகளில் சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை செயற்பாடுகள் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். இம்முறை ஜெனிவாவில் இதற்கான பிரதிபலிப்புகள் வெளிப்படும் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை விவகாரம் அடுத்த வாரம் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக இலங்கைக்கு ஏற்படும் சவால்கள் குறித்து வினவியபோதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கமாக நாம் நல்லிணக்க நகர்வுகள் குறித்து பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். அதில் பிரதானமானது புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதாகும். அதேபோல் நாம் பல்வேறு செயற்பாடுகளில் முன்னகர்வுகளை கையாண்டுள்ளோம். காணிகள் விடுவிப்பு விடயங்களில் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தகவல் அறியும் சட்டமூலம் கொண்டுவந்துள்ளமை, தேர்தல் முறைமை மாற்றங்கள் என்பனவும் இதன் ஒரு பிரதிபலிப்பாக கருத முடியும். எவ்வாறு இருப்பினும் நாம் இன்னும் முன்னோக்கி பயணிக்க வேண்டிய தேவை உள்ளது.
இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடியாக சில விடயங்கள் அமையும். குறிப்பாக நாம் இன்னும் முன்னெடுக்க வேண்டிய சில நடவடிகைகளில் முன்னேற்றங்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும். எனினும் அண்மைக் காலமாக நாட்டில் சிறுபான்மை மக்கள் மீதான சில அடக்கமுறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இவை எமக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியும். இந்த சம்பவங்கள் இப்போதே சர்வதேச ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளன.
எனவே இவை தொடர்பில் கேள்வி எழுப்பப்படலாம்.எனவே அரசாங்கமாக நாம் முன்னெடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இந்த நாட்டில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும். இதில் ஒரு சிலர் தமது அரசியல் சாதகத்தன்மையினை கருத்தில் கொண்டு இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
சிங்கள மக்களுக்கு உள்ள அதே உரிமை அந்தஸ்து இந்த நாட்டின் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உள்ளது. ஆகவே அதனை நாம் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும். அங்கீகரிக்கவும் வேண்டும். இனவாதம் மூலம் நாட்டில் ஒருபோதும் ஐக்கியத்தை உறுதிப்படுத்த முடியாது, ஆகவே விரைவில் தீர்வுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.