
2018 ம் ஆண்டு முதல் எஸ்பஸ்டஸ் (ASBESTOS) கூரைத்தகடு உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்க அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ் வௌ்ளை நிற எஸ்பஸ்டஸ் கூரைத்தகடுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீல நிற எஸ்பஸ்டஸ் கூரைத்தகடு மீதான தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தொழினுட்ப அறிக்கை கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எஸ்பஸ்டஸ் கூரைத்தகடுகளின் தரம் தொடர்பில் ஆராய அமைச்சரவை தீர்மானித்துள்ளதுடன் அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
எஸ்பஸ்டஸ் கூரைத்தகடு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் வளம் ரஷ்யா, சீனா, பிரேசிலில் இருந்து பெறப்படுகின்றது.
பொருத்தமற்ற எஸ்பஸ்டஸ் கூரைத்தகடுகள் இறக்குமதி செய்யப்படுமாயின் அது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக அடையாளங்காணப்பட்டதை தொடர்ந்து “ASBESTOS” கூரைத்தகடுகளின் உற்பத்தி மற்றும் இறக்குமதியை 2018 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் முற்றாக தடை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன 2015 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ம் திகதி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.