தமிழர்களுக்காக களம் இறங்கும் பௌத்த தேரர்கள் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தமிழர்களுக்காக களம் இறங்கும் பௌத்த தேரர்கள்

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க பௌத்த தேரர்கள் மட்டக்களப்புக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பகுதியில் அமையவிருக்கும் ஆரம்ப வைத்திய பராமரிப்புப்பிரிவு வைத்தியசாலைக் கட்டிடத்துக்குரிய அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது.
குறித்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள் எந்தவித அபிவிருத்திகளையும் காணவில்லை எனக் குறிப்பிட்ட இந்திரகுமார், இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் பங்காளியாக இருப்பதையிட்டு வெட்கித் தலைகுனியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்படுகின்ற அபிவிருத்திப் பங்கீடுகள் விகிதாசார முறையில் முன்வைக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர் அவ்வாறு செய்யப்படாவிட்டால் விகிதாசாரத்தை அமுல் படுத்த பௌத்த தேரர்கள் வர வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழர்களுக்காக குரல் கொடுத்து நியாயம் பெற்றுத் தர அம்பிட்டிய சுமணரத்ன போன்று பல தேரர்கள் மட்டக்களப்பிற்குள் வர இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றின் காணியை அபகரிக்கின்றபோது அரசியல்வாதிகள் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தால் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அங்கு களத்திற்குச் சென்று தமிழ் மக்களுக்கு நீதி கேட்டிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது எனவும் இந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS