ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக லண்டன் செல்ல வேண்டி இருப்பதால் 6 மாதம் பிணை வழங்கப்பட வேண்டும் என மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் இருக்கும் நளினி, பிணை கோரி உயர்நீதிமன்றம், மற்றும் மகளிர் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும் அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் மகளின் திருமணத்தை முன்னிட்டு பிணை கோரியுள்ள நளினியின் மனுவானது எதிர்வரும் வாரம் சென்னை உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியின் கணவர் முருகன் ஜீவசமாதிக்கு அனுமதி கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளதோடு, பேரறிவாளனும் பிணை கோரிக்கை முன்வைத்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
