பிரதேசவாத கருத்துகள் தெரிவிப்பது கண்டனத்திற்குரியது: ப.சத்தியலிங்கம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பிரதேசவாத கருத்துகள் தெரிவிப்பது கண்டனத்திற்குரியது: ப.சத்தியலிங்கம்

தமிழ் பேசும் மக்கள் என்று ஒரு குடையில் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையை நிலைநாட்டவேண்டிய சூழ்நிலையில் பிரதேசவாத கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் மேலும்,
வவுனியாவில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் இவ்வாறான பிரதேசவாத கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இது கண்டனத்திற்குரியது.
தமிழ் மக்கள் கட்சி அரசியலுக்குள் அகப்பட்டு பிரிந்து நிற்பதே ஆபத்தானது. இந்த நிலையில் குறுகிய வட்டத்திற்குள் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது வருத்தமளிக்கின்றது.
இந்த கருத்து தொடர்பில் நேரடியாக எனக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் எனக்கு ஆதரவாக நடைபெற்றதாக சொல்லப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் எனது கண்டனத்தை வெளியிடுவது தார்மீக கடமையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையின் போது சிலர் பிரதேசவாத கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS