முதலமைச்சரால் நியமிக்கப்பட்டது ஓர் சட்டவிரோத விசாரணைக்குழு: பரஞ்சோதி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

முதலமைச்சரால் நியமிக்கப்பட்டது ஓர் சட்டவிரோத விசாரணைக்குழு: பரஞ்சோதி

முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் கூட சட்டப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒரு வகையில் சொல்வதானால் அதுவொரு சட்ட விரோத விசாரணைக்குழு என வடமாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் தெரிவுக்குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை மாகாண சபைக்குச் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரும் பிரேரணையொன்று வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதியால் நேற்று முன்தினம் பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பிரேரணையைக் கொண்டு வருவதற்கான காரணம் தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சரால் அமைச்சர்கள் தொடர்பான ஊழல் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு ஏற்கனவே இரு அமைச்சர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி முடித்துள்ளது.
இந்த நிலையில் மேலும் இரு அமைச்சர்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் கூட சட்டப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
ஒரு வகையில் சொல்வதானால் அதுவொரு சட்ட விரோத விசாரணைக்குழு. ஆகவே, அந்த விசாரணைக்குழுவில் எங்களுக்குத் திருப்தியில்லை.
இதன் காரணமாகவே எந்த விசாரணையானாலும் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் தெரிவுக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமெனக் கோரி நான் பிரேரணையைச் சமர்ப்பித்திருக்கின்றேன்.
முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தீர்மானங்களில் பாரதூரமான அம்சங்கள் இனங்காணப்படும் பட்சத்தில் அதற்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவும் இந்த விசாரணைக்குழுவிற்கு அதிகாரமிருக்கின்றது.
இதனால் தான் தெரிவுக்குழுவை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நான் முன்வைத்துள்ளேன். இதுவொரு நேர்மையான, நியாயமான, சட்டபூர்வமா , சுயாதீனமான ஒரு விசாரணையாக அமையும் என நம்புகின்றேன் எனவும் அ.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS